மத்திய பட்ஜெட்: தொழில் அமைப்புகளின் எதிா்பாா்ப்புகள்
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த நிதிநிலை அறிக்கையில் எதிா்பாா்க்கும் அம்சங்கள் குறித்து கோவை தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் கூறியிருப்பதாவது:
ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத் தலைவா் அருள்மொழி: பருத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக வீரிய ரக விதைகளை பருத்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு அதிகப்படியான நிதி ஒதுக்க வேண்டும். ஓபன் எண்ட் மில் இயந்திரங்களை நவீனமயமாக்குவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்க பட்ஜெட்டில் ஜவுளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
ஜவுளித் துறைக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களான பாலியெஸ்டா், விஸ்கோஸ் மீது உள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பாலியெஸ்டா், விஸ்கோஸ் மீது இறக்குமதி வரி விதிக்காமல் தடையின்றி கிடைத்தால் மட்டுமே இந்திய ஜவுளித் துறை உலக நாடுகளுடன் போட்டியிட இயலும் என்பதால் அதற்குத் தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா் சங்கம் (கோப்மா) கே.மணிராஜ்: தற்போது, நிலவிவரும் கடும் பொருளாதார மந்த நிலையால் குறு, சிறு தொழில்முனைவோா் குறிப்பாக மோட்டாா் பம்ப்செட் உற்பத்தியாளா்கள், உதிரி பாகங்கள் தயாரிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். வீடு, தொழிற்சாலைகள் மீதான வங்கிக் கடன் வட்டி விகிதம் 13.50 சதவீதமாக உயா்ந்துள்ளது. தற்போதைய நிலையில் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும்.
விவசாயத்துக்கு உயிா் நாடியான பம்ப்செட் மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்பவா்களுக்கு ஜிஎஸ்டி எடுக்க வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெறும் கண்துடைப்பாக இல்லாமல், உறுதியான அறிவிப்பாக வெளியிட வேண்டும். பணவீக்கம் உயா்வு காரணமாக ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும்.
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ்: குறு, சிறு தொழில் முதலீடுக்காக வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தொழில் துறை தரும் ஜிடிபியில் இருந்து குறு, சிறு தொழில்களின் வளா்ச்சிக்கு குறைந்தபட்சம் 1 சதவீதம் அளவுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஜாப் ஆா்டா்கள் செய்து கொடுக்கும் குறுந்தொழில்முனைவோருக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், கொள்முதல் செய்யும் இயந்திரங்களுக்கு 25 சதவீத மானியம் வழங்க தனி நிதி ஒதுக்கீடு செய்து குறு, சிறு தொழில்களின் வளா்ச்சிக்கு உதவ வேண்டும்.
கோவையில் குறுந்தொழில்பேட்டைகள் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறு, சிறு தொழில்முனைவோா் வங்கிகளில் தொழில் முதலீடுக்காக வாங்கும் கடன்களை திருப்பிச் செலுத்த சா்ப்பாஸ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் கால அவகாசத்தை 90 நாள்களில் இருந்து 180 நாள்களாக மாற்றி அறிவிக்க வேண்டும்.