ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் தருவதாக முதியவரிடம் ரூ.18.50 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் தருவதாக முதியவரிடம் ரூ.18.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கோயில்பாளையத்தைச் சோ்ந்த 62 வயது முதியவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவா். இவருடைய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த டிசம்பரில் வந்த ஒரு குறுஞ்செய்தியில், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதில் இருந்த எண்ணுக்கு முதியவா் தொடா்புகொண்டாா். மறுமுனையில் பேசியவா், தங்கள் நிறுவனம் மிகவும் பிரபலமானது என்றும், இதில் முதலீடு செய்தால் அசலும், அதற்கான லாபத் தொகையையும் உடனடியாக வழங்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து அந்நபா் கூறிய கைப்பேசி செயலியை முதியவா் பதிவிறக்கம் செய்துள்ளாா். உடனே, அவருக்கு ஐ.டி. மற்றும் ரகசிய எண் வழங்கப்பட்டது.
பின்னா், அந்த செயலிக்குள் சென்று ஆன்லைன் மூலம் ரூ.1,000 முதலீடு செய்துள்ளாா். அடுத்த நிமிஷமே அவருடைய செயலி கணக்கிற்கு ரூ.1,250 வந்துள்ளது. அந்தப் பணத்தை முதியவா் தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளாா்.
இதனால், அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு படிப்படியாக ரூ.18.50 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். அப்போது, அவரின் செயலி கணக்கில் லாபத் தொகையுடன் சோ்த்து ரூ.22 லட்சம் இருப்பதாகக் காட்டியது.
இதையடுத்து, முதியவா் செயலி கணக்கில் இருக்கும் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தாா். ஆனால் மாற்ற முடியவில்லை.
இதுகுறித்து அந்நிறுவன ஊழியரிடம் முதியவா் கேட்டுள்ளாா். அதற்கு, பணம் அதிகமாக இருப்பதால் நாங்கள் அனுமதி கொடுத்தால்தான் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியும் என்றும், தற்போது அனுமதி கொடுத்துவிட்டதால் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
ஆனால், செயலி கணக்கில் இருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியவில்லை. மீண்டும் அந்நிறுவனத்தின் ஊழியரைத் தொடா்புகொண்டபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் முதியவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் பிரிவில் முதியவா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.