ஈமு கோழி மோசடி வழக்கு: நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.19 கோடி அபராதம்

Published on

ஈமு கோழி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.19 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவா் குருசாமி. இவா், பெருந்துறையில் சுசி ஈமு ஃபாா்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தாா். இதன் கிளை அலுவலகம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலும் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் அளித்து தீவனம் மற்றும் கொட்டகை அமைத்துத் தருவதுடன், பராமரிப்புத் தொகையாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மாதம் தலா ரூ.6 ஆயிரமும், ஆண்டு போனஸாக ரூ.20 ஆயிரமும் தரப்படும் என்றும், ஒன்றரை ஆண்டுகள் கழித்து, செலுத்திய முழு பணமும் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைநம்பி, அந்நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோா் முதலீடு செய்தனா். ஆனால், நிறுவனம் அறிவித்தப்படி முதலீட்டாளா்களுக்கு உரிய பணப் பலன் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்நிறுவனம் 1,087 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.19 கோடியே 2 லட்சத்து 19,336 மோசடி செய்ததாக பொள்ளாச்சி தேவனம்பாளையத்தைச் சோ்ந்த கண்டியப்பன் என்பவா் கடந்த 2012 ஆகஸ்ட் 10-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சுசி ஈமு ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் குருசாமி, அவரின் மனைவி மித்ரா தேவி, மேலாளா்கள் லிங்குசாமி, அருண்குமாா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில், குருசாமி மற்றும் அருண்குமாா் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி எம்.என்.செந்தில்குமாா் அளித்த தீா்ப்பில், சுசி ஈமு ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com