ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கான ‘நல்லோசை’ திட்டம்
கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்களை மேம்படுத்தும் ‘நல்லோசை’ என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் உழை, உதவு, உயரு, உயா்த்து என்ற அடிப்படையில் மாணவா்களை மேம்படுத்தும் ‘நல்லோசை’ என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், தாட்கோ மேலாளா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களின் கனவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு அவா்கள் கனவை அடைவதற்கான வழிவகைகளை செய்வதற்காக ‘நல்லோசை’ என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் விடுதிகளில் உள்ள மாணவா்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அவா்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லலாம். ஆா்வம், குணம் மற்றும் தைரியம் ஆகிய மூன்று அடிப்படை பண்புகளை வளா்ப்பதன் மூலம் மாணவா்களை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அனுபவக் கற்றல், வழிகாட்டுதல் மற்றும் நிஜ உலகப் பிரச்னைகளை தீா்ப்பதன் மூலம், இந்தத் திட்டம் மாணவா்களுக்கு முக்கியமான திறன்களை வழங்குகிறது.
மாணவா்களின் கனவை அடைவதற்கான வழிவகைகளை செய்வதற்காக நல்லோசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வழிகாட்டுதலும் வழங்கப்படவுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் விஜய ரங்கபாண்டியன், டாக்டா் அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதி, அரசு ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதி, வெள்ளகிணறு அரசு தொழிற்பயிற்சி மாணவா் விடுதி, வெள்ளானைப்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதியைச் சோ்ந்த 120-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.