கோவையில் உள்ள தனியாா் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினா் சோதனை
கோவையில் உள்ள தனியாா் மதுபான ஆலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியாா் மதுபான ஆலையில் பல்வேறு மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் இருந்து தமிழ்நாடு வாணிபக் கழகத்துக்கு (டாஸ்மாக்) மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்த ஆலையில் இருந்து டாஸ்மாக் சாா்பில் கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களை, வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிவைப்பது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்த மதுபான ஆலையிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 போ் சோதனை செய்தனா்.
அப்போது, ஆலையின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கணினிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றில் இருந்த விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த மதுபான ஆலையில் இருந்து எத்தனை டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வளவு மதுபானங்கள் செல்கின்றன, அதற்கான ஆவணங்கள் சரியாக உள்ளதா, மதுபானங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பன குறித்து சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது.