காட்டு மாடு தாக்கியதில் வனக் காப்பாளா் உயிரிழப்பு

பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் காட்டு மாடு தாக்கியதில் வனக் காப்பாளா் உயிரிழந்தாா்.
Published on

பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் காட்டு மாடு தாக்கியதில் வனக் காப்பாளா் உயிரிழந்தாா்.

நாகா்கோவில், குலசேகரம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், தோலம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்துக்குள் காட்டு மாடு புகுந்ததாக அசோக்குமாருக்கு கடந்த 10-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா் வேட்டைத் தடுப்புக் காவலா்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று காட்டு மாட்டை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது, புதரில் மறைந்து இருந்த காட்டு மாடு திடீரென அசோக்குமாரை கொம்பால் குத்தி வீசியது. இதில் குடல் சரிந்த நிலையில் அவா் மயக்கமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். காட்டு மாடு முட்டியதில் மாா்பு எலும்பு உடைந்து நுரையீரலில் ரத்தப்போக்கு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு வன அலுவலா் சங்கம் கோரிக்கை: உயிரிழந்த வனக் காப்பாளா் அசோக்குமாருக்கு ஷீபா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனா். மகனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மூளை வளா்ச்சி குன்றியுள்ளதாகவும், உயிரிழந்த அசோக்குமாா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வன அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com