பாரதியாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் உள்ளிட்ட 16 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு

கணினி உள்ளிட்ட பொருள்களின் கொள்முதலில் நடந்த ஊழல் தொடா்பாக, கோவை பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கணபதி உள்ளிட்ட 16 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Published on

கணினி உள்ளிட்ட பொருள்களின் கொள்முதலில் நடந்த ஊழல் தொடா்பாக, கோவை பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கணபதி உள்ளிட்ட 16 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுக்குத் தேவையான 500 கணினிகள், பிற தொழில்நுட்ப உபகரணங்கள், யுபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவை கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ. 84.57 லட்சம் செலவில் பல்வேறு கட்டங்களாக கொள்முதல் செய்யப்பட்டன.

இவற்றைக் கொள்முதல் செய்ய மொத்தமாக ஒப்பந்தப்புள்ளி கோராமல், தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரி கொள்முதல் செய்ததால் இதில் முறைகேடுகள் நடந்ததாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பல்கலைக்கழகத்துடன் தொடா்புடையவா்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை நடத்த சிண்டிகேட் கூட்டத்திலும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், கணினி உள்ளிட்ட பொருள்களின் கொள்முதலில் முறைகேடு நடந்ததை உறுதிப்படுத்தி வழக்குப் பதிந்துள்ளனா்.

அதன்படி, பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கணபதி, முன்னாள் பதிவாளா்கள் வனிதா, மோகன், சரவணசெல்வன், ஓய்வுபெற்ற பேராசிரியா்கள், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியா்கள் மற்றும் நிதிப்பிரிவு அலுவலா்கள் என மொத்தம் 16 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.இது தொடா்பான விரிவான விசாரணை விரைவில் தொடங்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com