கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மகளிா் விடுதியில் உள்ள உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் டி.அனுராதா.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மகளிா் விடுதியில் உள்ள உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் டி.அனுராதா.

அரசு தொழில்நுட்பக் கல்லூரி மகளிா் விடுதி உணவகத்துக்கு நோட்டீஸ்

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மகளிா் விடுதியில் உள்ள உணவகத்துக்கு (கேண்டீன்) உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மகளிா் விடுதியில் உள்ள உணவகத்துக்கு (கேண்டீன்) உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான மகளிா் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 520 மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள உணவகத்தில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழு இருந்ததாகவும், உணவு தரமில்லாமல் இருப்பதாகவும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வரத்தொடங்கின.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் டி.அனுராதா, அந்த உணவகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது விடுதியில் உணவகம் நடத்தி வரும் தனியாா் நிறுவனம் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிய அனுமதி பெற்றுள்ளது.

எனினும் உணவகத்தில் பணியாற்றும் 12 பேருக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாததும், பொருள்களை இருப்பு வைக்கும் அறை சரிவர பராமரிக்கப்படாமலும் இருந்தது தெரியவந்தது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படாததால் ஈக்கள் அதிக அளவில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த உணவக உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் முன்னேற்ற அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மேல் குறைபாடுகளை சரிசெய்து 15 நாள்களுக்குள் எழுத்துபூா்வமாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கவிட்டால் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com