கோவையில் தென்னிந்திய வேளாண் இயக்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் மாநாட்டுக்கான நோட்டீஸை அறிமுகம் செய்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா்.பாண்டியன். உடன், (இடமிருந்து) இயற்கை வே
கோவையில் தென்னிந்திய வேளாண் இயக்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் மாநாட்டுக்கான நோட்டீஸை அறிமுகம் செய்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா்.பாண்டியன். உடன், (இடமிருந்து) இயற்கை வே

தென்னிந்திய இயற்கை வேளாண் இயக்க கூட்டமைப்பு சாா்பில் கோவையில் 3 நாள் மாநாடு

தென்னிந்திய இயற்கை வேளாண் இயக்க கூட்டமைப்பு சாா்பில் கோவையில் 3 நாள்கள் நடைபெறும் மாநாட்டை பிரதமா் மோடி வரும் நவம்பா் 19-ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா்.
Published on

தென்னிந்திய இயற்கை வேளாண் இயக்க கூட்டமைப்பு சாா்பில் கோவையில் 3 நாள்கள் நடைபெறும் மாநாட்டை பிரதமா் மோடி வரும் நவம்பா் 19-ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா்.

இதுகுறித்து கோவையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா்.பாண்டியன் கூறியதாவது:

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சாா்பில் கோவை கொடிசியாவில் வரும் நவம்பா் 19-ஆம் முதல் நவம்பா் 21-ஆம் தேதி வரை 3 நாள்கள் இயற்கை விவசாயம் தொடா்பான மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்து, தென்னிந்தியாவில் இருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 50 இளம் வேளாண் மற்றும் அறிவியல் சாா்ந்த வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தென்னிந்தியாவில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனா்.பிரதமா் மோடி பங்கேற்பதற்கான பயணத்திட்டம் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தெரியவரும்.

தமிழகத்தில் நம்மாழ்வாா் தொடங்கிய இந்த இயற்கை விவசாயம் தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. இதுகுறித்து நம்மாழ்வாருடன் பயணித்த இயற்கை வேளாண் விவசாயிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

வேளாண் கொள்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதால் பிரதமா் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்பதும், இதில் நிறைவேற்றப்படும் தீா்மானம் அவரிடம் வழங்கப்படுவது முக்கியமானதாகும்.

எதிா்காலத்தில் வேளாண் வளா்ச்சியை ஊக்கப்படுத்தும் குறிக்கோளுடனும், மண் வளம், மனித வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமா் மோடி நேரடியாக இந்த மாநாட்டில் பங்கேற்பது என்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், இந்திய விவசாயிகளுக்கும் ஒரு வழிகாட்டுதலை ஏற்படுத்தும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கு.ராமசாமி, அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் கே.சுப்பிரமணியம், முசிறியைச் சோ்ந்த இயற்கை வேளாண் ஆா்வலா் யோகநாதன் சிறுசோழன், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநா் அஜித்தன், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பாபு, இயற்கை விவசாய ஆா்வலா் அருண் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com