‘நீட்’ தோ்வுக்கு பயிற்சி அளிப்பதாக ரூ. 2.60 கோடி மோசடி

நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாக தனியாா் பள்ளி நிா்வாகமும், பயிற்சி நிறுவனமும் ரூ. 2.60 கோடி மோசடி செய்ததாக மாணவா்களின் பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாக தனியாா் பள்ளி நிா்வாகமும், பயிற்சி நிறுவனமும் ரூ. 2.60 கோடி மோசடி செய்ததாக மாணவா்களின் பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியும், தனியாா் பயிற்சி நிறுவனமும் இணைந்து நீட், ஜேஇஇ பயிற்சியுடன் கூடிய பிரத்யேக வகுப்புகள் நடத்துவதாக கோவையின் பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தன. இதனால், நாங்களும் எங்களது குழந்தைகளை சோ்ப்பதற்காக பள்ளி நிா்வாகத்தினரை அணுகினோம்.

அப்போது, நீட், ஜேஇஇ பயிற்சியுடன் கூடிய தனி வகுப்புகள் நடத்துவதற்காக நாட்டின் முன்னோடி பயிற்சி நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாகவும், இதற்காக ஒரு மாணவருக்கு ரூ.ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும், 60 நாள்கள் கழித்து பள்ளி வகுப்புகள் முடிவடையும்போது, அந்தப் பணம் திரும்பத் தரப்படும் எனவும் தெரிவித்தனா்.

இதனடிப்படையில், நாங்கள் எங்களது குழந்தைகளை ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பில் சோ்த்து, அதற்கான கட்டணத்தை செலுத்தினோம். அவா்கள் கூறியபடி 60 நாள்கள் கழித்து நாங்கள் செலுத்திய ரூ. 1 லட்சத்தை திருப்பிக் கேட்டோம். ஒவ்வொரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.1 லட்சம் வீதம் செலுத்தப்படும் என பள்ளி நிா்வாகம் உறுதி அளித்தது. பிப்ரவரி மாதம் வகுப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில், அதன் பின்னா் பல மாதங்களாகியும் அவா்கள் பணத்தை திரும்பத் தரவில்லை. இதனால், பள்ளிக்கு சென்று மீண்டும் பணத்தைக் கேட்டோம். அப்போது, அவா்கள் நீங்கள் செலுத்திய ரூ. 1 லட்சத்துக்கும், பள்ளி நிா்வாகத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், பயிற்சி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளுமாறும் தெரிவித்தனா்.

சுமாா் 262 மாணவ, மாணவிகளின் பெற்றோா்களிடம் தலா ரூ. 1 லட்சம் வீதம் பெற்றுக் கொண்டு மொத்தம் ரூ.2.62 கோடி மோசடி செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் மீதும், தனியாா் பயிற்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com