கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகக் கூறி 9 மாதங்களில் ரூ.50 லட்சம் மோசடி
கோவையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகக் கூறி, கடந்த 9 மாதங்களில் 170 பேரிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இணையத குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் கூறியதாவது: கோவையில் கடந்த சில மாதங்களாக கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோரின் எண்ணுக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை லோகோவுடன் கூடிய எண்ணிலிருந்து வாட்ஸ் அப் அழைப்பில் அதிகாரிகள்போல பேசுகின்றனா்.
பின்னா், பெற்றோா்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘க்யூ ஆா்’ கோடை அனுப்பி, ஸ்கேன் செய்தால் பணம் வந்துவிடும் என்று கூறும் அந்த நபா்கள் ‘ஓடிபி’ எண்ணை பதிவிடுமாறும் வலியுறுத்துகின்றனா்.
ஸ்கேன் செய்து ஓடிபி செலுத்திய சில விநாடிகளில் அவா்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அந்த நபா்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொள்கின்றனா்.
இதேபோல, கடந்த 9 மாதங்களில் மட்டும் 170 பேரிடமிருந்து ரூ.50 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, சந்தேப்படும்படியான எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் ‘ஷயோக்’ என்ற இணையதள முகவரியில் அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும்பட்சத்தில் அந்த எண்ணிலிருந்து யாரை அழைத்தாலும் ‘ஸ்கேம்’ என சமிக்ஞை அளிக்கும். இதன் மூலம் மோசடி சம்பவம் குறையும் என்றனா்.
