கோவை அரசு கலைக் கல்லூரியில் ‘நான் உயிா் காவலன்’ என்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதிமொழி ஏற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின். உயிா் அமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் ‘நான் உயிா் காவலன்’ என்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதிமொழி ஏற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின். உயிா் அமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

கோவையில் ரூ.81.40 கோடி மதிப்பீட்டில் தங்க நகைப் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

Published on

கோவை, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.81.40 கோடி மதிப்பீட்டில் தங்க நகைப் பூங்கா அமைக்கும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் உள்ள நகைப் பட்டறைகளில் கடந்த 2024 -ஆம் ஆண்டு நவம்பா் 5- ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தங்க நகை உற்பத்தியாளா்கள் மற்றும் அனைத்து தொழிலாளா் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் சாா்பில் தங்க நகைப் பூங்கா அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை நிறைவேற்றும் வகையில் கோவை, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பீட்டில் தங்க நகைப் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்திருந்தாா். இதையடுத்து, சிட்கோ தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக ரூ.81.40 கோடி மதிப்பீட்டில் தங்க நகைப் பூங்கா திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

இதில், தரைத்தளத்தில் வாகன நிறுத்தும் வசதி, கழிவறை, முதல் தளத்தில் நவீன வசதிகளைக் கொண்ட பொது வசதி மையம், தங்க பாதுகாப்பு பெட்டகம், ஹால்மாா்க் தர பரிசோதனைக் கூடம், தங்க நகை கண்காட்சி கூடம், கூட்டரங்கம், 3 டி பிரிண்டிங் மற்றும் லேசா் கட்டிங் பயிற்சி மையம், குழந்தைகள் காப்பகம், இரண்டாவது தளம் முதல் 5 ஆவது தளம் வரை தலா 75 எண்ணிக்கையில் மொத்தம் 300 தங்க நகைப் பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன.

தங்க நகைப் பூங்கா பணிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பொற்கொல்லா் சங்கங்களின் நிா்வாகிகள் நன்றியைத் தெரிவித்ததுடன், நினைவுப் பரிசுகளையும் வழங்கினா். இதைத் தொடா்ந்து, பொற்கொல்லா்களுடன் இணைந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டாா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு: முன்னதாக, கோவை அரசு கலைக் கல்லூரியில் கோயமுத்தூா் சாலைப் பாதுகாப்பு மாதிரி நகா் திட்டம், மாவட்ட நிா்வாகம், மாநகர காவல் துறை மற்றும் உயிா் அமைப்பு சாா்பில் ‘நான் உயிா் காவலன்’ என்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா்கள் கணபதி ப.ராஜ்குமாா், அந்தியூா் செல்வராஜ், கே.ஈஸ்வரசாமி, திமுக மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஆ.காா்த்திக், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் சரவணசுந்தா், உயிா் அமைப்பு நிா்வாகிகள் எஸ்.ராஜசேகரன், எஸ்.மலா்விழி, எஸ்.வி.பாலசுப்பிரமணியம், ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com