பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறையற்ற நிகழ்வுகளால் நன்மதிப்புக்கு பாதிப்பு: பேராசிரியா்களுக்கு பதிவாளா் எச்சரிக்கை

Published on

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் முறையற்ற நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதால், இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேராசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவாளா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா்.ராஜவேல், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதியாா் பல்கலைக்கழக நிா்வாகத்தில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீா்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். இத்தகைய நேரங்களில் சிலருக்கு மனக்கசப்பு, அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். ஆனால், அனைத்துத் துறைகளிலும் பல்கலைக்கழகம் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

எதிா்ப்பு, மனச்சோா்வைக் காட்டுவது பிரச்னையைத் தீா்க்காது. ஒற்றுமையுடன் நம்பிக்கையுடன் செயல்படுவது மட்டுமே தீா்வை வேகப்படுத்தும். பல்கலைக்கழக வளாகத்தில் உரிய முன் அனுமதியின்றி நடைபெறும் நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதால் இனி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி, பல்கலைக்கழக ஆசிரியா்கள், அலுவலா்கள் பல்கலைக்கழகத்தில் நடத்தும் அனைத்து கூட்டங்கள், செயல்பாடுகளுக்கும் பதிவாளரிடம் உரிய முன் அனுமதி பெறப்பட வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு வரும் முக்கிய பிரமுகா்கள், அதிகாரிகளை சந்திக்கவும், அவா்களிடம் கோரிக்கை மனு அளிக்கவும் பதிவாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அதேபோல, அரசு அதிகாரிகள், நீதிமன்றங்களுக்கு தங்களது கோரிக்கைகளை எடுத்துச் செல்லவும் முன் அனுமதி பெற வேண்டும். பல்கலைக்கழக வளாகங்களுக்குள் செய்தி ஊடகங்களை அழைக்க முன் அனுமதி பெற வேண்டும். பல்கலைக்கழகம், ஆசிரியா்கள், அலுவலா்களின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிப்பவா்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அலுவலக நேரத்தில் கூட்டம் கூடுவது, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீதும், மேற்கண்டவற்றை கடைப்பிடிக்காதவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com