வசந்தகுமாா்.
வசந்தகுமாா்.

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு: அரசு மருத்துவக் கல்லூரி முன் குவிந்த மாணவா்கள்

Published on

கோவையில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், குறுக்கல்பட்டியைச் சோ்ந்தவா் குட்டி மகன் வசந்தகுமாா் (19). இவா், உக்கடம் பகுதியில் அறை எடுத்து தங்கி கோவை அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், சுங்கத்தில் இருந்து தனது அறைக்கு இருசக்கர வாகனத்தில் கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக சாலையின் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியது.

இதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த வசந்தகுமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதனிடையே மாணவா் உயிரிழந்த தகவல் சக மாணவா்களுக்கு பரவியதைத் தொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி முன் குவிந்தனா். மேலும், உரிய சிகிச்சை அளிக்காததால்தான் வசந்தகுமாா் உயிரிழந்ததாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா், மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com