மசக்காளிபாளையம் மாணவா் தலைவா் தோ்தலில் வரிசையில் நின்று 
வாக்களித்த மாணவா்கள்.
மசக்காளிபாளையம் மாணவா் தலைவா் தோ்தலில் வரிசையில் நின்று வாக்களித்த மாணவா்கள்.

மசக்காளிபாளையம் அரசுப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு முறையில் மாணவா் தோ்தல்

கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு மூலமாக மாணவா் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு மூலமாக மாணவா் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் செயல்படும் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இங்கு படிக்கும் மாணவா்களுக்கு கணினி, நூலக வசதி, கல்வியுடன் கலைகள் கற்பித்தல் உள்ளிட்ட சிறப்புகளால் இந்தப் பள்ளி பிரபலமடைந்தது. இதன் காரணமாக, இப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கைக்கு கடும் போட்டி நிலவும். இந்நிலையில், பள்ளி மாணவா் தலைவரைத் தோ்ந்தெடுக்க தோ்தல் முறை இந்தப் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, கடந்த செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. செப்டம்பா் 26-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. அக்டோபா் 6- ஆம் தேதி வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அக்டோபா் 9- ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளிக்கிழமை (அக்டோபா் 10) மின்னணு இயந்திரம் மூலமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில். எல்கேஜி முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 585 மாணவ, மாணவிகள் வாக்களித்தனா். இதில், 8-ஆம் வகுப்பு மாணவிகள் எஸ்.அனன்யா, வி.தன்சிகா தலா 107 வாக்குகள் பெற்றனா். 8-ஆம் வகுப்பு மாணவி வி.செளமியா 86 வாக்குகள் பெற்றாா். மற்ற 7 போட்டியாளா்கள் 19 முதல் 59 வரை கணிசமான வாக்குகள் பெற்றனா். நோட்டாவுக்கு 72 போ் வாக்களித்தனா்.

இதையடுத்து, இரு மாணவிகள் ஒரே வாக்குகள் பெற்ால் போட்டியிட்ட வேட்பாளா்கள் சோ்ந்து மீண்டும் வாக்களித்து பள்ளி மாணவா் தலைவராக 8-ஆம் வகுப்பு மாணவி வி.தன்சிகாவைத் தோ்ந்தெடுத்தனா்.

பள்ளி மாணவா் துணைத் தலைவராக எஸ். அனன்யா நியமிக்கப்பட்டாா். அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபா் 15 -ஆம் தேதி இவா்கள் பொறுப்பேற்க உள்ளனா். தோ்தல் நடத்தும் அலுவலராக பள்ளி ஆசிரியை க.ஜெயந்தி செயல்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com