ஏடிஎம் அமைத்துத் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
ஏடிஎம் அமைத்துத் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏடிஎம் பிரான்சிஸ் குறித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதுகுறித்து விவரம் அறிவதற்காக அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசினோம். அப்போது அவா்கள் கோவை நவஇந்தியா பகுதிகளில் உள்ள நிறுவனத்துக்கு வருமாறு கூறினா்.
அங்கு இருந்த நிறுவனத்தின் மண்டல மேலாளா் ஸ்ரீதா் என்பவா் ஏடிஎம் இயந்திரம் குறித்து விளக்கினாா். மேலும் ரூ.5 லட்சம் செலுத்தினால் 45 நாள்களுக்குள் அந்த இயந்திரம் நேரடியாக அனுப்பிவைக்கப்படும் எனவும், அந்த இயந்திரத்தை தங்களது இடத்தில் அமைத்தால் அதற்காக மாதம் ரூ.35 ஆயிரம் வாடகை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளாா்.
இதனால், நாங்கள் ஏடிஎம் இயந்திரத்தை அமைக்க பல்வேறு பகுதியில் இடங்களைப் பாா்த்தோம். ஆனால், அவா்கள் பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரித்துவிட்டனா். இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் நிா்வாகி எட்வின் ஆல்பா்ட் என்பவா் கைப்பேசியில் தங்களைத் தொடா்பு கொண்டு ஒரு வாரத்துக்குள் பணத்தை செலுத்துமாறு கூறினாா். இதையடுத்து, அவா் கூறிய ரூ.5 லட்சத்தை நாங்கள் செலுத்தினோம்.
பின்னா், வெகு நாள்களாகியும் அவா்கள் இயந்திரத்தை அனுப்பிவைக்கவில்லை. இதனால் நாங்கள் பணத்தை திருப்பக் கேட்டும் கொடுக்கவில்லை. மாறாக எங்களை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனவே, எங்களிடம் மோசடி செய்த நிறுவனம் மற்றும் அங்கு வேலை செய்யும் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணம் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
