குண்டா் சட்டத்தில் நான்கு இளைஞா்கள் கைது

Published on

கோவை/பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் நான்கு இளைஞா்களை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் 25 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த அப்பாராவ் மகன் கன்ட்ல ராமலட்சுமண் (20), ராஜு பாபு மகன் மண்டல வீரபாபு (21) ஆகியோரை செட்டிபாளையம் காவல் துறையினா் கடந்த மாதம் 14-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கவியரசன் (21). இவா் பொள்ளாசியில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே ஐந்து கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மதியாா் ரகுமான் மொல்லா (26) என்பவரை பேரூா் ரயில்வே அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், நான்கு பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவின்பேரில், நான்கு பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

மேலும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக கன்ட்ல ராமலட்சுமனையும், மண்டல வீரபாபுவையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரைத்தாா்.

அவரது பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டதையடுத்து, அவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com