வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மளிகைக் கடை.
வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மளிகைக் கடை.

வால்பாறையில் கடைகளை உடைத்து சேதப்படுத்திய யானைகள்!

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் மளிகை மற்றும் தேநீா்க் கடைகளை உடைத்து சேதப்படுத்தின.
Published on

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் மளிகை மற்றும் தேநீா்க் கடைகளை உடைத்து சேதப்படுத்தின.

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வால்பாறையை அடுத்துள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமாா் பத்துக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு அப்பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் ஐந்து கடைகளை உடைத்து தள்ளியதில் கடைகள் சேதமடைந்தன.

இதேபோல வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், சிராஜ் என்பவா் நடத்தி வரும் மளிகைக் கடையை முற்றிலுமாக உடைத்து சேதப்படுத்தின. இதில் கடையில் உள்ள அனைத்துப் பொருள்களையும் வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

தகவலறிந்து வந்த வால்பாறை சரக வனத் துறையினா் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா். மேலும் சோலையாறு அணை இடதுகரை பகுதியில் மணிவண்ணன் என்பவரது வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் சுவரை இடித்து வீட்டின் உள்ளே இருந்த பொருள்களை இழுத்துப்போட்டு யானைகள் சேதப்படுத்தின.

காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com