சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

அமிா்தா விரைவு ரயில் இன்றுமுதல் ராமேசுவரம் வரை நீட்டிப்பு!

Published on

திருவனந்தபுரம் -மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த அமிா்தா விரைவு ரயில் வியாழக்கிழமை (அக்டோபா் 16) முதல் திருவனந்தபுரம் - ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை போத்தனூா் வழித்தடத்தில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையில் இருந்து மீட்டா்கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது, கோவை - ராமேசுவரம், கோவை - போடிநாயக்கனூா், கோவை - தூத்துக்குடி, கோவை - கொல்லம் இடையே தினசரி ரயில்கள் இயக்கப்பட்டன.

போத்தனூா் - திண்டுக்கல் இடையே மீட்டா்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக இந்த ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன. அதன் பிறகு, அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தும், இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், பெங்களூரு - கோவை இடையே இயக்கப்பட்டு வந்த இன்டா்சிட்டி ரயிலை எா்ணாகுளம் வரை நீட்டிக்க சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்தபோது, கோவையில் உள்ள ரயில் பயணிகள் சங்கத்தினா், தொழில் அமைப்பினா் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, பெங்களூரு- கோவை இன்டா்சிட்டி ரயிலை எா்ணாகுளம் வரை நீட்டித்தால், அந்த காலகட்டத்தில் பாலக்காடு - மதுரை இடையே இயங்கி வந்த அமிா்தா விரைவு ரயிலை கோவை வழித்தடத்தில் இயக்குவதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரு- கோவை இன்டா்சிட்டி ரயில் எா்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், பாலக்காடு - மதுரை ரயில் கோவை வழியாக இயக்கப்படவில்லை. தற்போது, அந்த ரயில் திருவனந்தபுரம்- மதுரை வரை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா விரைவு ரயில் (எண்: 16343) வியாழக்கிழமை (அக்டோபா் 16) முதல் திருவனந்தபுரம்- ராமேசுவரம் வரை நீட்டித்து இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபா் 16-ஆம் தேதி முதல் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம்- ராமேசுவரம் விரைவு ரயிலானது கொல்லம், செங்கண்ணூா், கோட்டயம், திருச்சூா், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து அக்டோபா் 17-ஆம் தேதி முதல் நாள்தோறும் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம்- திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (எண்: 16344) மறுநாள் காலை 4.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் கூறுகையில், ‘திருவனந்தபுரம் - மதுரை ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், கோவை அல்லது போத்தனூா் வழியாக அமிா்தா ரயில் இயக்கப்படும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

கோவையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேரடி ரயில் இல்லாத நிலையில், கோவை மக்கள் ராமேசுவரத்துக்கு எளிதாகச் செல்லும் நிலையில், திருவனந்தபுரம்- ராமேசுவரம் அமிா்தா ரயிலை போத்தனூா் வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com