தில்லி உள்ளிட்ட நகரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் சித்திரவேல் (32). இவா் தில்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளாா். மேலும், மத்திய அரசுப் பணி வாங்கிக் கொடுப்பதாகக் கூறியும் இணையதளம் மூலம் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து தில்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வந்தனா்.
அப்போது, சித்திரவேல் கோவையில் பதுங்கி இருப்பது குறித்து தில்லி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவை வந்த தில்லி சி.பி.ஐ. அதிகாரிகள் பந்தயசாலைப் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்த சித்திரவேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.
அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ. அதிகாரி தோற்றத்திலும் போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து அவா் மத்திய ஆயுதப்படை போலீஸாரின் உதவியுடன் தனி இடத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சித்திரவேல் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் நீதிமன்ற அனுமதியின் பேரில் அவரை தில்லிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.