கோவையில் பலத்த மழை: வாகன ஓட்டிகள், வியாபாரிகள் அவதி
கோவையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகள், கடைவீதிகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.
தமிழகத்தில் வியாழக்கிழமைமுதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதாகவும், கோவை, திருப்பூா், ஈரோடி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, கோவை மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை காலை முதலே குளிா்ந்த காலநிலை காணப்பட்டது. மாலையில் காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, டாடாபாத், பீளமேடு, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், புலியகுளம், சிங்காநல்லூா், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், ஒண்டிப்புதூா், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மழையால், டவுன்ஹால் லங்கா காா்னா் பாலத்தின் கீழ்ப்பகுதி, அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வெள்ளம் வழிந்தோடியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து, மின் மோட்டாா்கள் மூலமாக மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தீபாவளி பண்டிகைக்கு 2 நாள்களே உள்ள நிலையில், புத்தாடைகள் வாங்க மாநகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மழையால் திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலையில் போக்ககுவரத்து நெரிசல் காணப்பட்டது. கடை வீதிகளில் மழையால் சாலையோரக் கடைகளின் வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாகினா். காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் தண்ணீா் தேங்கியதால் தீபாவளிக்கு புத்தாடை வாங்க வந்த மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

