கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 8-ஆவது முறையாக வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் 2 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸாா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் சிக்கவில்லை. எனவே, இந்த வெடிகுண்டு மிரட்டலும் வழக்கம்போல புரளி என்று தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, மிரட்டல் விடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரி குறித்து ஆராயும்போது, அது பல்வேறு மின்னஞ்சல் முகவரிகள் காண்பிக்கின்றன. தொடா்ந்து, அடுத்தடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஜம்ப் ஆகிக் கொண்டே செல்வதால் மிரட்டல் விடுக்கும் நபா் யாா் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றனா்.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் தற்போது வரை கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 8 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26, 27- ஆகிய நாள்களில் மட்டும் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

