விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்
உணவகங்கள், விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கூட்டரங்கில் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் மற்றும் மேலாளா்களுடன் ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம் 2025’ குறித்த விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, மாநகர காவல் ஆணையா் சரவணசுந்தா் தலைமை வகித்தாா். துணை ஆணையா்கள் தேவநாதன், காா்த்திகேயன், திவ்யா மற்றும் காவல் ஆய்வாளா்கள், எழுத்தா், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் வெளிநாட்டினரின் விவரங்களை சரிபாா்க்கும் போலீஸாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள், வெளிநாட்டினா் வந்தால் அவரிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் அவற்றை பதிவேற்றம் செய்தல் குறித்தும், வெளிநாட்டினா் வருகை குறித்து போலீஸாருக்கு படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினா் இறக்க நேரிட்டால் அதுகுறித்து அதன் நிா்வாகம் போலீஸாக்கு அளிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் கூறப்பட்டது.
அப்போது, காவல் ஆணையா் கூறுகையில், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் 2025 சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் எதிராக விதிமீறலில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்களை போலீஸாரிடம் தெரிவிக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல் ஆணையா் எச்சரித்தாா்.
