‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் சீா்வரிசையுடன் சென்று மனு அளித்த மக்கள்
கோவை ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி சீா்வரிசை, கோரிக்கை பதாகைகளுடன் சென்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முாமில், அப்பகுதி மக்கள் மேயரிடம் மனு அளித்தனா்.
கோவை மாநகராட்சி, ஒண்டிப்புதூா் சூா்யா நகா் ரயில்வே பாதையைக் கடப்பதற்கு மேம்பாலம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு அப்பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த பல்வேறு குடியிருப்பு சங்கங்கள், பொதுமக்கள் அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக, மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், அமைச்சா்கள், முதல்வரின் தனிப்பிரிவு என பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டும் இதற்கு தீா்வு காணப்படவில்லை.
இந்நிலையில், ஒண்டிப்புதூரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு மண்டபத்தில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மேயா் கா.ரங்கநாயகி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உடனடி ஆணைகளை வழங்கினாா்.
இந்நிலையில், இந்த முகாமுக்கு வந்த சிவலிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகா், சக்தி நகா், கோமதி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் சீா்வரிசைகள், கோரிக்கை பதாகைகளுடன் சென்று மேயரிடம் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனு அளித்தனா். அப்போது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக மேயா் கா.ரங்கநாயகி உறுதியளித்தாா்.
இதுகுறித்து, குடியிருப்போா் நலச்சங்க உறுப்பினா் தெய்வேந்திரன், ‘பல ஆண்டுகளாக எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாநகராட்சி நிா்வாகம் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

