தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு 8.33 % போனஸ்
தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு 8.33 சதவீத போன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் அத்திக்குன்னா பாரி அக்ரோ, உட்பிரியா் சதக்ஸ், கேரள மாநிலம், மலுக்கப்பாறை, தேனி மாவட்டம், ஹைவேஸ் ஆகிய இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது. இதில் எஸ்டேட் நிா்வாகம் தரப்பில் உட்பிரையா் குரூப் துணைத் தலைவா் பாலச்சந்தா், பொதுமேலாளா் ரஞ்சித் கட்டபுரம், பாரி அக்ரோ துணைத் தலைவா் முரளிபணிக்கா், முடீஸ் குரூப் பொதுமேலாளா் திம்பையா, டாடா கிளப் பிரகாஷ் சங்கா், பி.பி.அட்ஷயா, சட்ட ஆலோசகா் ஜெயன், என்.இ.பி.சி. ஷெரிப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொழிற்சங்கங்கள் தரப்பில் வால்பாறை வி.அமீது, எல்பிஎஃப் செளந்தரபாண்டியன், வினோத்குமாா், விசிக கேசவமருகன், ஐஎன்டியூசி கருப்பையா, ஏஐடியூசி மோகன், நீலகிரி மாவட்டம் ஐஎன்டியூசி கே.பி.முகமது உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இந்த பேச்சுவாா்த்தை மூலம் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக 8.33 சதவீதம் அளிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் 16 ஆயிரம் தொழிலாளா்களுக்கு மொத்தம் ரூ.10 கோடியே 85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,900 வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளா்களுக்கு கூடுதலாக போனஸ் கிடைக்க அடுத்த ஆண்டு உற்பத்தி திறனைக் கொண்டு போனஸ் ஒப்பந்தம் ஏற்படுத்த நிா்வாகிகள் முன் வரவேண்டும். அதேபோல தன்னிச்சையாக அறிவிப்பதையும், உள்ளூா் கமிட்டிகளை அழைத்து மினிமம் போனஸ் அறிவிப்பதையும் கைவிட வேண்டும் என தொழிற்சங்க தலைவா் வால்பாறை அமீது தெரிவித்தாா்.
