புரட்டாசி நிறைவு: உக்கடம் மீன் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்
புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், உக்கடம் மீன் சந்தைக்கு கடல் மீன்களின் வரத்து அதிகரித்து, விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. இதனால் காலை முதலே மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு கேரள மாநிலம், கொச்சின், சாவக்காடு, தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேசுவரம், கடலூா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கடந்த நாள்களில் புரட்டாசி மாதம் காரணமாக அசைவ உணவுகளை பெரும்பாலானோா் தவிா்த்ததால் மீன் சந்தையில் வரத்து குறைந்து, விற்பனையும் மந்தமாகவே காணப்பட்டது. இந்நிலையில், தற்போது, புரட்டாசி மாதம் முடிவடைந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் உக்கடம் மீன் சந்தைக்கு விற்பனைக்காக ஞாயிற்றுக்கிழமை 10 டன் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
தீபாவளி தொடா் விடுமுறையை முன்னிட்டும் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததாலும் உக்கடம் மீன் சந்தையில் விற்பனை களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வஞ்சிரம் கிலோ ரூ.650, பாறை ரூ.350, வாவல் ரூ.350, அயிலை ரூ.120, நண்டு ரூ.500, மத்தி ரூ.200-க்கு விற்பனையாகின.

