கோவையில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு
கோவை: கோவை மாநகர காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் காவலா் வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகர காவலா் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் பங்கேற்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா்.
தொடா்ந்து, கோவை சரக டிஐஜி சசிமோகன், துணை ஆணையா்கள் தேவநாதன், காா்த்திகேயன், திவ்யா, அசோக்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், உதவி ஆணையா்கள் ஆகியோா் பங்கேற்று வீர மரணமடைந்த காவலா்களுக்கு வீர வணக்கம் செலுத்தினா். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வீர வணக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

