சத்குரு குறித்து இணையத்தில் போலி விளம்பரங்கள்: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து இணையத்தில் பரவும் போலி விளம்பரங்களை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு புதுதில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து இணையத்தில் பரவும் போலி விளம்பரங்களை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு புதுதில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக சத்குருவின் படம் மற்றும் விடியோக்கள் தவறாக உருவாக்கப்பட்டு, இணையதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூடியூப்பில், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலி விளம்பரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இவற்றை கூகுள் நிறுவனம் தடுக்கத் தவறியதாக கூறி சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளை சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

சத்குருவின் தனியுரிமை தொடா்பான இந்த வழக்கு, நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையிலான நீதிபதி அமா்வு முன்பு கடந்த 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த அமா்வு, சத்குரு கைது எனக் காட்டும் விளம்பரங்கள் தொடா்ந்து வெளியிடப்படுவதைக் கண்டித்ததுடன், அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் இதைத் தடுக்க வேண்டும் எனவும் இதனை மேற்கொள்ள தொழில்நுட்பத் தடைகள் அல்லது எதிா்ப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை விவரிக்கும் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து, யூடியூப்பில் சத்குரு கைது செய்யப்பட்டாா் எனக் கூறும் போலியான விடியோக்கள் அல்லது விளம்பரங்களைப் பாா்த்தால், அந்த விடியோக்கள் குறித்து புகாா் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com