கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் சாலையில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் சாலையில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்.

மாநகரில் பட்டாசுக் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

தீபாவளியையொட்டி, மாநகரில் தேங்கிய பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Published on

கோவை: தீபாவளியையொட்டி, மாநகரில் தேங்கிய பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரில் உள்ள 100 வாா்டுகளிலும் தினமும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரமாகின்றன. இவற்றை மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரித்து பெறும் மாநகராட்சி ஊழியா்கள், வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மற்றும் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கு மறுசுழற்சிக்காக கொண்டு செல்கின்றனா்.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை கடந்த 20-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் மாநகரில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு முதல் தீபாவளி தினமான அக்டோபா் 20-ஆம் தேதி இரவு வரை 1,500 டன்களுக்கு அதிகமான குப்பைகள் தேங்கின. பட்டாசுக் குப்பைகள், அட்டைப்பெட்டிகள் என தேங்கிய குப்பைகள் சாலையோரங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

மாநகரின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அரைநாள் மட்டுமே விடுமுறை தரப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை 2,500 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரத் தூய்மைப் பணியாளா்கள் பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் கூறுகையில், தீபாவளியால் அதிக அளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதில் 500 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டுள்ளன. தேங்கிய மீதமுள்ள குப்பைகள் புதன்கிழமை முழுவதுமாக அகற்றப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com