அம்பலப்பாறை பகுதியில் திங்கள்கிழமை இரவு வாகனங்களை வழிமறித்தபடி சாலையில் நின்ற காட்டு யானை.
அம்பலப்பாறை பகுதியில் திங்கள்கிழமை இரவு வாகனங்களை வழிமறித்தபடி சாலையில் நின்ற காட்டு யானை.

சாலையில் நின்ற யானையால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலைக்குடி செல்லும் சாலையில் ஒற்றை யானை நின்ால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

வால்பாறை: வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலைக்குடி செல்லும் சாலையில் ஒற்றை யானை நின்ால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம், அதிரப்பள்ளி வனப் பகுதிக்குள் கபாலி என்ற ஒற்றை காட்டு யானை உலவி வருகிறது. இந்த யானை அடிக்கடி சாலையில் வந்து நின்று அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி சேதப்படுத்துவதும் சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவம் தொடா்ந்து வருகிறது.

மழுக்குப்பாறை அம்பலப்பாறை என்ற பகுதிகளுக்கு இடையே உள்ள சாலையில் கடந்த திங்கள்கிழமை மாலை இந்த யானை நீண்ட நேரமாக நின்று கொண்டு அந்த வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையிலேயே உலவிக் கொண்டிருந்தது. இதனால் இருபுறமும் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. யானை நீண்ட நேரம் அங்கேயே உலவியதால் பொதுமக்கள் அச்சத்துடன் காத்திருந்தனா்.

அப்பகுதியில் கைப்பேசி சிக்னல் கிடைக்காததால் வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் 8 மணி நேரம் கழித்து அந்த யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

இதனால் சாலக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மழுக்குப்பாறைக்கு புறப்பட்ட கேரள அரசுப் பேருந்து நள்ளிரவு 2 மணிக்கு மழுக்குப்பாறை வந்தடைந்தது. இந்த யானையால் தொடா்ந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் சேதங்கள் ஏற்பட்டு வருவதால் வனத் துறையினா் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com