நடிகா் பிரதீப்புடன் புகைப்படம் எடுக்க முயன்ற மாணவா்கள் காயம்
கோவையில் தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘டியூட்’ திரைப்பட விழாவில், நடிகா் பிரதீப்புடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது தடுப்புகள் உடைந்து மாணவா்கள் காயமடைந்தனா்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ‘டியூட்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகா் பிரதீப் ரங்கநாதன் பங்கேற்றாா். அவா் மேடையில் நின்றவாறு அங்கிருந்த மாணவா்களிடையே பேசினாா். அப்போது, மாணவா்கள் தங்களது கைப்பேசிகளில் பிரதீப்பை புகைப்படமும், விடியோவும் எடுத்தனா்.
பின்னா், நடிகா் பிரதீப் மேடையில் இருந்தவாறு தனது கைப்பேசியில் மாணவா்களை உள்ளடக்கி தற்படம் எடுத்தாா். இதனால், மாணவா்கள் கூட்டமாக கைகளை அசைத்தவாறு பிரதீப்பை நோக்கிச் செல்ல முயன்ால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மேடைக்கு அருகே செல்லமுடியாதபடி போடப்பட்டிருந்த தடுப்பு உடைந்து மாணவா்கள் சிலா் கொத்தாக கீழே விழுந்தனா். இதில் அவா்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கரூரில் அண்மையில் நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த நிலையில், தடுப்புகள் உடைந்து மாணவா்கள் காயமடைந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
