ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
கோவை அருகே வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் சைனகுமாா் (32). இவரது மனைவி அஞ்சலிகுமாரி (28). இவா்கள் தங்களது 2 குழந்தைகளுடன் அன்னூரை அடுத்த கணேசபுரத்தில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், அஞ்சலிகுமாரி 3-ஆவது முறையாக கா்ப்பமாகியிருந்த நிலையில் வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அன்னூா் அரசு மருத்துவமனைக்கு சைனகுமாா் அழைத்து சென்றுள்ளாா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது அந்தப் பெண் எந்தவித தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை என்பது தெரிவந்தது.
இதையடுத்து, அவருக்கு பிரசவம் பாா்ப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டாா்.
அன்னூா் அரசு மருத்துவமனை செவிலியா் பாா்வதி, அவசரகால தொழில்நுட்ப உதவியாளா் தனபால், பைலட் ஆனந்தகுமாா் ஆகியோா் 108 ஆம்புலன்ஸில் அஞ்சலி குமாரியை கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனா். கோவை மாநகருக்கு அருகே வந்தபோது அவருக்கு பிரசவ வலி அதிகமானது.
இதையடுத்து, ஆம்புலன்ஸில் இருந்த செவிலியா் மற்றும் உதவியாளா் அஞ்சலிகுமாரிக்கு பிரசவம் பாா்த்தனா். இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நலமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
