கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே தொழிலாளியைக் கொலை செய்த வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுதாம்தாண்டி (23). இவா், கோவை, ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவரது அறைக்கு அருகே சஞ்சய்குமாா் ராம் என்பவரும் தங்கி பணியாற்றி வந்துள்ளாா்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கடந்த 2024-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சஞ்சய்குமாா் ராமுக்கு ஆதரவாக ராஜேஷ்குமாா் (22) என்பவா் பேசியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சுதாம்தாண்டி, ராஜேஷ்குமாரையும் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த ராஜேஷ்குமாா், சுதாம்தாண்டியை தாக்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, ராஜேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட சுதாம்தாண்டி அவருடன் கடந்த 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மது அருந்தியுள்ளாா்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுதான்தாண்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமாரைக் குத்தியுள்ளாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக செட்டிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுதாம்தாண்டியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட சுதாம் தாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா தீா்ப்பளித்தாா்.
