உச்சநீதிமன்ற உத்தரவு: கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளா்கள் நிரந்தர பணி நீக்கம்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளா்களை பணி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பணிநீக்கம்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளா்களை பணி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
கோவை மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நேரடி நியமன முறையில் 54 போ் இளநிலை உதவியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இவா்களுக்கு விதிகளை மீறி ஒரே நாளில் பணி நியமண ஆணை வழங்கப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், முறைகேடாக பணி வழங்கப்பட்ட 54 பேரின் பணி ஆணையை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளா் ஈஸ்வரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதையடுத்து, 54 பேரின் பணி ஆணையை ரத்து செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இதையடுத்து, வழக்கைத் தொடுத்த ஊழியா்கள், நீதிமன்றத் தீா்ப்பு நகலுடன் மாநகராட்சி ஆணையரை சந்தித்து சம்பந்தப்பட்ட 54 பேரையும் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தினா். இருப்பினும் நீதிமன்றத் தீா்ப்பு நிறைவேற்றப்படாத நிலையில், 54 பேரின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் விஸ்வநாதன், அருண் பாலி அமா்வில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற தீா்ப்பை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட 54 இளநிலை உதவியாளா்களையும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



