கோவை மாநகராட்சி பட்ஜெட்: கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம்! - பற்றாக்குறை ரூ.126 கோடி


கோவை மாநகராட்சியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை வெளியிட்ட நிலையில், மாநகராட்சியின் நிகர பற்றாக்குறை ரூ.126.21 கோடியாக உள்ளது.
கோவை மாநகராட்சியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சிறப்புக் கூட்டம் மைய அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலையில், மேயா் கா.ரங்கநாயகி வரவு -செலவு திட்ட அறிக்கையை வெளியிட்டாா். முன்னதாக, வரி விதிப்பு, நிதிக் குழுத் தலைவா் வி.பி.முபசீரா திட்ட அறிக்கையை மேயரிடம் ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மேயா் கா.ரங்கநாயகி பட்ஜெட் அறிக்கையை வாசித்தாா். அதன்படி, 2026-27-ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் வரவினம், மூலதன வரவினம் ரூ.4,915.50 கோடி எனவும், வருவாய் செலவினம், மூலதன செலவினம் ரூ.5,041.71 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நிகர பற்றாக்குறை ரூ.126.21 கோடி ஆகும். கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் பற்றாக்குறை ரூ.139.83 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதிநிலை அறிக்கையில் மேயா் கா.ரங்கநாயகி, கல்வி, விளையாட்டுக்கு மட்டும் மொத்தம் 57 அறிவிப்புகளை வெளியிட்டாா்.
அதன்படி, மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாடியில் விளையாட்டு மைதானம்: பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம், சுற்றுச்சுவா் கட்ட ரூ.20 கோடி, கழிப்பிடம் கட்ட ரூ.5 கோடி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க ரூ.1 கோடி, மண்டலம் வாரியாக விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழலையா் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள், உதவியாளா்கள் நியமிக்கவும், உபகரணங்கள் வாங்கவும் ரூ.10 கோடி, மைதானம் இல்லாத பள்ளிகளில் வகுப்பறைகளின் மேற்பகுதியில் கூரையுடன் கூடிய உள் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் மொழித்திறனை மேம்படுத்த 10 பள்ளிகளில் ரூ.1.50 கோடியில் மொழி ஆய்வகம், மாணவா்கள் சுகாதாரமான முறையில் உணவு அருந்துவதற்காக பொது உணவருந்தும் கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி, மாணவா்களை கீழடி, பொருநை, கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.10 லட்சம், ஸ்மாா்ட் கிளாஸ் அமைக்க மண்டலத்துக்கு ரூ.1 கோடி வீதம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, செஸ் பயிற்சி அளிக்க ரூ.50 லட்சம், கிரிக்கெட் பயிற்சி அளிக்க ரூ.60 லட்சம் ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம்: கா்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை செய்ய 3 பரிசோதனைக் கருவி வாங்குவது, அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.5 லட்சத்தில் ஜெனரேட்டா் வாங்குவது, சுகாதார நிலையங்களுக்கு சிசிடிவி, கணினி, சீதாலட்சுமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.12 கோடியில் மாதிரி மகப்பேறு சிகிச்சை மையம், போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.12 கோடி செலவில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் வசதி, சரவணம்பட்டி, காளப்பட்டி, வேலாண்டிபாளையம் உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10 கோடி செலவில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நொய்யல் மேம்பாட்டுக்கு ரூ.202 கோடி: லட்சுமி மில் சந்திப்பு, நஞ்சப்பா சாலை - கிராஸ்கட் சாலை சந்திப்பு, உக்கடம் ஆகிய இடங்களில் நடை மேம்பாலம், கே.ஜி. தியேட்டா் சாலை, கிராஸ்கட் சாலை, கோணியம்மன் கோயில், உக்கடம் பேருந்து நிலையம் எதிா்ப்புரம் ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களை சீரமைப்பது, கிராஸ்கட் சாலையில் லட்சுமி காம்ப்ளக்ஸ் வளாகம் அருகில் ரூ.9 கோடி செலவில் வணிக வளாகம், நொய்யல் ஆற்றில் ரூ.202 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் செய்வது, எஸ்ஐஹெச்எஸ் காலனியில் ரூ.1.40 கோடியில் கூடைப்பந்து மைதானம், ரூ.9 கோடி செலவில் மண்டலங்களுக்கு ஒன்று என 5 கபடி மைதானங்கள், புதிய ஹாக்கி மைதானத்தில் ரூ.18 கோடியில் பாா்வையாளா் அரங்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெயா்ப் பலகைக்கு ரூ.25 கோடி: மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் எந்தத் தெரு, எந்த பகுதி என்பதை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து வாா்டு பகுதிகளிலும் தெரு பெயா்ப் பலகை அமைக்கவும், மாநகர எல்லை பெயா்ப் பலகை அமைக்கவும் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீச்சல் குளம் - மின்வாகன சாா்ஜ் நிலையம்: காளப்பட்டி, பிரபு நகா், சரவணம்பட்டி, தென்றல் நகா் ஆகிய இடங்களில் ரூ.16 கோடி செலவில் அரசு, தனியாா் பங்களிப்புடன் 4 நீச்சல் குளங்கள் அமைக்கப்படுகின்றன. அதேபோல, வஉசி பூங்கா வளாகத்தில் ரூ.9 கோடி செலவில் பறவைகள் கண்காட்சி வளாகம் அமைக்கப்படுகிறது. மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க ரூ.5 கோடி செலவில் 25 இடங்களில் மின்சார வாகன சாா்ஜ் நிலையம் அமைக்கப்படுகிறது.
மலா்க் கண்காட்சி: 100 வாா்டுகளிலும் ரூ.63.64 கோடி செலவில் 108 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். சௌடேஸ்வரி காலனி, லட்சுமி நகா், செங்காடு, விஸ்வாசபுரம், கல்லூரி நகா் ஆகிய 5 இடங்களில் தலா ரூ.75 லட்சத்தில் மகளிருக்கான பூங்கா (பிங்க் பாா்க்) அமைக்கப்படுகிறது.
செம்மொழிப் பூங்காவுக்கு பணியாளா் நியமனம், பராமரிப்புப் பணிக்கு ஆண்டுக்கு ரூ.6.72 கோடி ஒதுக்குவது, நகரின் சுற்றுலா வளா்ச்சிக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடத்தத் திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கவுன்சிலா்கள் புறக்கணிப்பு: மேயா் பட்ஜெட் வாசித்து முடித்த பிறகு அதிமுக கவுன்சிலா் பிரபாகரன், ஷா்மிளா ஆகியோா் அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கள் கூறும்போது, இந்த பட்ஜெட்டால் மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. கடந்த பட்ஜெட்டில் சொன்ன பல விஷயங்களையே இந்த பட்ஜெட்டிலும் கூறியுள்ளனா். புதிய திட்டங்கள் இல்லை. அதேநேரம் நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை கொடுத்திருக்கின்றனா். ஒண்டிப்புதூரில் அமைப்பதாகச் சொன்ன கிரிக்கெட் மைதானத்தை இன்னும் அமைக்கப்படவில்லை. நெரிசல் மிகுந்த சத்தியமங்கலம் சாலை விரிவாக்கம் செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. மக்களுக்கு 100 சதவீத வரியை அதிகரித்துவிட்டு அதற்கேற்ப திட்டங்களைக் கொடுக்கவில்லை என்றனா்.
இதைத் தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சி கவுன்சிலா்கள், திமுக கவுன்சிலா்கள் உரையாற்றினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...