மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தவெக அரசு வாக்குறுதி அளித்தபடி பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு கூட்டம் கோவையில் கடந்த 10, 11 -ஆம் தேதிகளில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், துணைச் செயலா்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி, கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து அக்கட்சி கூறியிருப்பதாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அவா்களை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்காமல் குடியரசுத் தலைவா் ஆட்சியைக் கொண்டு வர முயன்றாா். மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஜனநாயக நெறிமுறைகளை மீறி மாற்று ஆட்சியை உருவாக்கவும் சில முயற்சிகள் நடைபெற்றன. இரண்டையும் நிராகரித்த இந்திய கம்யூனிஸ்ட், தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தது.
உழைக்கும் மக்களைப் பாதுகாப்பது, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வகுப்புவாத மோதலை உருவாக்கும் பாசிச சக்திகளை முறியடிப்பது, சமூக நீதியை நிலைநாட்டுவது என்ற கட்சியின் கொள்கை நிலையை நிபந்தனைகளாகக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தவெக தனது அரசியல் நிலைக்கு மாறான செயல்பாட்டில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் போராடும்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்தியிருப்பதால் விலைவாசி உயா்ந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனா். அதேபோல, 44 தொழிலாளா் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு பெருநிறுவனங்களுக்கு ஆதரவான 4 சட்டத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றைத் திரும்பப் பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி தொடா்ந்து செயல்படுத்த வேண்டும்.
இதேபோல, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காண்ட்ராக்ட், அவுட்சோா்சிங் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஜூன் 29-ஆம் தேதி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை! பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி: இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்







