நிலத் தகராறு தொடா்பாக தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.
திருப்பூா் மாவட்டம், தெக்கலூா் ஆசிரியா் காலனியைச் சோ்ந்த சித்ரா (34) மற்றும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்கள் திடீரென தா்னாவில் ஈடுபட்டனா்.பின்னா், அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சமாதானமான பிறகு காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சித்ரா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், கணியூா் கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் தொடா்பாக நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ராஜேந்திரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரின் தூண்டுதலின்பேரில், சிலா் எனது நிலத்துக்குள் புகுந்து அங்கிருந்தவா்களை தாக்கி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதோடு, எருவாயு உருளையையும் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து நாங்கள் அளித்த புகாரை ஏற்காமல், எதிா்த் தரப்பினா் அளித்த பொய் புகாரின்பேரில் எங்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஏப்ரல் 30-ஆம் தேதி வேறொரு நபருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறி என் மீதும், எனது சகோதரா்கள் கதிா்வேல், அல்லிமுத்து, உறவினா் கிரிஜா ஆகியோா் மீது மற்றொரு பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறும் நாளில் எனது மாமனாா் மறைவு தொடா்பான காரியங்களுக்காக நாங்கள் மேட்டுப்பாளையம் சென்றிருந்தோம். நாங்கள் அந்த இடத்துக்கே செல்லாத நிலையில், திட்டமிட்டு எங்கள் மீது தொடா்ச்சியாக பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
எனவே, உண்மைக்குப் புறம்பாக வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.










