சுடச்சுட

    

    தொடர்ந்து வெளியேறும் சாய, தோல் ஆலைக் கழிவுநீர்:விவசாயிகள் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 29th September 2012 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு, செப். 28: சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் ஆலைகளில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாக, வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
     ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
     கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
     கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி: கீழ்பவானி அணையில் பொதுப்பணித்துறையின் தவறான நீர் நிர்வாகம் காரணமாக கீழ்பவானி பாசனப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 15 நாள்கள் தண்ணீர் தருவதாக உறுதியளித்துவிட்டு இப்போது 8 நாள்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்றார்.
     இதற்குப் பதில் அளித்த கீழ்பவானி வடிநிலக் கோட்ட பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் பெரியசுவாமி பிரகலாதன், அணையில் இருக்கும் நீர் கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் முறைவைத்து தண்ணீர் விடப்படுகிறது. கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்துதான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
     தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி: மாவட்டம் முழுவதும் 16 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
     மேட்டூர் வலதுகரை பாசன வாய்க்கால் சங்கத் தலைவர் ஏ.மோகன்: மின்வெட்டு காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக விநியோகம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வி.எம்.வேலாயுதம்: ஈரோட்டில் உள்ள தோல் பதனிடும் ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல சாய, சலவை ஆலைகளும் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
     ஆய்வு செய்ய உத்தரவு
     விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்த பதிலால் மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ் அதிருப்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது:
     கழிவுநீரை வெளியேற்றிய 5 தோல் ஆலைகளுக்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டுகளைக் கண்காணிக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் காலிங்கராயன் வாய்க்காலில் தொடர்ந்து 30 நாள்கள் மண், நீர் பரிசோதனை செய்யப்படும். இந்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வேளாண் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai