குடியிருப்பு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தோல் ஆலைகளை இடமாற்றம் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு, சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் மு.அப்பாஜி, செயலர் டி.டி.மாணிக்கம், எம்.கேசவன் ஆகியோர் புதன்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சி, சூரியம்பாளையம் கிராமத்துக்கு உள்பட்ட பாலக்காட்டூர், தெய்வபுரம், இந்திரபுரம், கருப்பணகவுண்டன் புதூர், மராபாளையம், சிலோன் காலனி, தண்ணீர்பந்தல்பாளையம், சொட்டையம்பாளையம், அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், பி.என்.புதூர், வீரப்பண்ணாடியூர், வீரப்பண்ணாடி புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 14 தோல் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளை குடியிருப்பு பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து போராடிவருகிறோம். இந்த ஆலைகளால் இப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் (ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகள்) பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இந்த நீரைக் குடிக்கவோ விவசாயத்திற்கோ, கால்நடைகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்றும், விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆலைகளில் எவ்வித கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. எனவே, இந்த ஆலைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவேண்டும். குடியிருப்பு, கோவில், தொடக்கப் பள்ளி அருகே உள்ள ஆலைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.