ஜவுளி நிறுவனங்களின் கடன் தவணையைச் செலுத்த2 ஆண்டுகள் அவகாசம் வழங்கக் கோரிக்கை

ஜவுளி நிறுவனங்களின் கடன் தவணைத் தொகையைச் செலுத்த கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

ஜவுளி நிறுவனங்களின் கடன் தவணைத் தொகையைச் செலுத்த கூடுதலாக 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ரிசவர் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் ராஜாராமிடம், கூட்டமைப்பின் தலைவர் என்.சிவநேசன், பொதுச்செயலர் வி.கே.ராஜமாணிக்கம் ஆகியோர் புதன்கிழமை அளித்த மனு:

ரிசவர் வங்கியின் அறிவிப்பின்படி கடந்த மே 27-ஆம் தேதி முதல் பொதுமக்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்றாலும் அவர்கள் கணக்கில் அபராதத் தொகையை வசூலிக்கக்கூடாது என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இதை அனைத்து வங்கிகளும் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜவுளித் துறையில் கடன் பெற்றவர்கள் பல்வேறு பிரச்னைகள் காரணமாக தவணைகளை முறையாக செலுத்த இயலாமல் உள்ளனர். அவர்களின் தவணையை செலுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் தரவேண்டும். சூரியஒளி மின்சக்தி வீடுகளில் எரிகிறபோது 1 கிலோவாட் வரை 40 சதவீதம் மானியம் நபார்டு வங்கி மூலமாக வழங்குவது வரவேற்புக்குரியது. அதேநேரத்தில், வங்கிகள் வழங்கும் கடனின் மீதான வட்டியை 5 சதவீதமாக நிர்ணயிக்கவேண்டும். கல்விக் கடன்கள் வழங்கும்போது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் கடன்கள் வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய அரசின் உத்தரவின்படி ரூ. 4 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு எவ்விதமான பிணையும், சொத்துக்களும் அடமானம் கேட்கக்கூடாது என்பதை வங்கிகளுக்கு விளக்கமாக தெளிவுபடுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, 10 வயதுக்கு மேற்பட்ட இளம் சிறார்கள் நேரடியாக சேமிப்புக் கணக்குகள் தொடங்கி வரவு - செலவு செய்துகொள்ளும் நடைமுறையை அனைத்து வங்கிகளிலும் பின்பற்ற அறிவுறுத்தவேண்டும்.

சில்லரைக் காசு தட்டுப்பாட்டை தவிர்க்க தானியங்கி சில்லரை வழங்கும் எந்திரங்களை ஏடிஎம்களில் நிறுவவேண்டும்.

சில்லரைக் காசுகள் போதுமான அளவிற்கு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து அனுப்பி வைக்கவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com