ஓடைப் புறம்போக்கு பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யவேண்டும் என கவுண்டச்சிபாளையம் அருகே உள்ள நத்தக்காட்டுப்பாளையம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
பெருந்துறை வட்டம், கவுண்டச்சிபாளையம் கிராம ஊராட்சிக்குள்பட்ட நத்தக்காட்டுப்பாளையத்தில் ஓடைப் புறம்போக்கு பகுதியில் சுமார் 450 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நத்தக்காட்டுப்பாளையத்தில் மழை பெய்தால் மழைநீர் மொத்தமும் பிரதான ஓடையில் கலக்கும். தற்போது கவுண்டச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் மழைநீர் வரும் ஓடையை பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக சிலர் சமன் செய்து குடியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதை தட்டிக் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். குறிப்பிட்ட அந்த இடத்தில் வீடு கட்டும்போது மழைக் காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, குறிப்பிட்ட ஓடைப் புறம்போக்கு பகுதியில் கொடுத்துள்ள புதிய இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ய ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.