மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விரைவில் ஏடிஎம், இணையதள வங்கி வசதி ஏற்படுத்தப்படும் என்று ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் கூறினார்.
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 34-ஆவது ஆண்டு பொதுப் பேரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
2013-14-ஆம் ஆண்டில் உறுப்பினர் சங்கங்களில் இருந்து பங்குத் தொகையாக ரூ. 8.24 கோடி திரட்டப்பட்டது. 31.3.2014-ஆம் தேதி வரை ரூ. 46.66 கோடி நிலுவை உள்ளது. தனிநபர், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து வைப்புத் தொகையாக ரூ. 233.57 கோடி திரட்டப்பட்டது. 31.3.2014-ஆம் தேதி வரை வங்கியின் மொத்த வைப்பு நிலுவைத் தொகை ரூ. 1,272 கோடியாக உள்ளது.
மொத்த வைப்புத் தொகையில் குறைந்த வட்டி விகித வைப்புகளான சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின் நிலுவை ரூ. 159.42 கோடி ஆகும். தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் இருந்து 31.3.2014-ஆம் தேதி வரை பெற்ற கடன்களின் நிலுவைத் தொகை ரூ. 246 கோடியாகும்.
நடப்பு ஆண்டில் மத்தியக் கூட்டுறவு வங்கி ரூ. 23.05 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில், ரூ. 1.18 கோடி நிதி ஒதுக்கீடுகளாகவும், ரூ. 7.40 கோடி வருமான வரிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் நிகர லாபம் ரூ. 14.47 கோடியாக இருந்தது.
வணிக வங்கிகளுக்கு இணையான தொழில்நுட்ப சேவைகளான ஏடிஎம், இணையதள வங்கி சேவை ஆகிய சேவைகளைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், வங்கி இயக்குநர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.