விசைத்தறித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன திட்டங்கள் குறித்து ஈரோடு கிளப் மெலாஞ்ச் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) காலை 10 மணி அளவில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம் மற்றும் ஈரோடு விசைத்தறி சேவை மையம் சார்பில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கிற்கு கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகத்தின் துணை இயக்குநர் பாலகுமார் தலைமை வகிக்கிறார்.
மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளர் ராசுமணி, பெடக்ஸில் தென்மண்டல துணைத் தலைவர் வி.டி.கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
விசைத்தறி சேவை மையத்தின் உதவி இயக்குநர் குமரவேல் வரவேற்கிறார்.
விசைத்தறியில் நவீன தறிகளை பயன்படுத்துதல் மற்றும் சைசிங் தொழில்நுட்பம் குறித்தும், நவீன விசைத்தறி தொழில்நுட்பத்தில் நாடா இல்லா தறிகளை பயன்படுத்துதல், ஏர்ஜெட் நாடா இல்லா தறிகளை பயன்படுத்துதல், ரேப்பியல் நாடா இல்லாத தறிகள் குறித்தும் குறிப்பிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
மேலும், விசைத்தறித் துறையில் நவீனமயமாக்கல் மற்றும் நிர்வாக மேலாண்மை குறித்து சிட்ராவை சேர்ந்த சங்கரநமச்சிவாயம் விளக்கமளிக்க உள்ளார்.
ஈரோடு விசைத்தறி சேவை மையத்தின் உதவி இயக்குநர் குமரவேல் விசைத்தறி சேவை மையத்தின் செயல்பாடுகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கிறார்.
தொடர்ந்து, நூல் வங்கித் திட்டம் குறித்து கோவை ஜவுளி ஆணையர் அலுவலகத்தின் உதவி இயக்குநர் சிவஞானம் விளக்கமளிக்கிறார். தொழில்நுட்ப அலுவலர் சுதாராணி நன்றி கூறுகிறார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்று பயனடையலாம் என பெடக்ஸில் துணைத் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.