Enable Javscript for better performance
முத்துலெட்சுமி ரெட்டியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்- Dinamani

சுடச்சுட

    

    முத்துலெட்சுமி ரெட்டியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்

    Published on : 27th March 2014 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டியை கல்லூரி மாணவிகள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

    ÷ஈரோட்டை அடுத்த சித்தோடு அருகே எல்லீஸ்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் மேலாண்மை கல்லூரி ஆகியவற்றின் ஆண்டு விழா, விளையாட்டு விழாவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர் பேசியது (படம்):

    ÷புதுக்கோட்டையில் மாணவர்கள் மட்டுமே படித்த கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி விண்ணப்பித்தார். இந்தக் கல்லூரியில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதால், அவரது விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாகம் ஏற்கவில்லை.

    ÷இக் கல்லூரியின் முன்னாள் முதல்வராக முத்துலெட்சுமி ரெட்டியின் தந்தை பணியாற்றியதால், புதுக்கோட்டை மன்னரிடத்தில் சென்று விதிவிலக்கு பெற்று இக் கல்லூரியில் முதல் மாணவியாக சேர்க்கப்பட்டார்.

     கல்லூரியில் முடித்த பின்னர் மீண்டும் மாணவர்கள் மட்டுமே படித்த சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக சேர்ந்தார். இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரியவரானார்.

    ÷மிகச் சிறந்த மருத்துவராக திகழ்ந்தாலும், முழுமையாக சமூகசேவையிலும் ஈடுபட்டார். பெண் உரிமைக்கு குரல் கொடுத்ததோடு பெண்களுக்கான மகளிர் சங்கங்களை தோற்றுவித்து, அதன் தலைவராகவும் திகழ்ந்தார். பெண்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் அவர். அதேபோல மேலை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவிலேயே சட்டப்பேரவை முதல் பெண் உறுப்பினர் என்ற பெயர் பெற்றார்.

    ÷பெண்களுக்கான பல சட்டங்கள் கொண்டுவர காரணமாக இருந்தவர். இளவயது திருமணம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பலதார மனச்சட்டம், போன்ற புரட்சிகரமான சட்டங்கள் கொண்டுவர முக்கியக் காரணமாக திகழ்ந்தவர் முத்துலெட்சுமி ரெட்டி. இத்தகைய பெருமை பெற்ற பெண்மணிகளின் வீர வரலாறுகளை இக்காலத்து கல்லூரி மாணவிகள் கற்று உணர்ந்தால், சமுதாயத்தில் மாபெரும் விழிப்புணர்வு உருவாகும்.

    ÷பாரதி, பாரதிதாசன் கண்ட கனவுகளை நிறைவேற்ற மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும். உலகத் தரம் வாய்ந்த புத்தகங்களை இந்த ஆண்டு ஈரோட்டில் நடைபெறும் 10-வது புத்தகக் திருவிழாவில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். மிகச்சிறந்த புத்தகங்கள் அனைத்தையும் பன்படுத்திக்கொள்ள மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் தயாராக வேண்டும்.

    ÷தமிழகத்தையே அறிவுக்களஞ்சியமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உயரிய சமூக சிந்தனையின் காரணமாக, ஈரோடு புத்தகத் திருவிழா தேசிய தரத்தோடு நுழைவுக் கட்டணம் இன்றி சமுதாய நோக்குடன் நடத்தப்படுகிறது என்றார்.

     விழாவில் கல்லூரித் தாளாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமி, முதல்வர் பேராசிரியர் ந.கந்தசாமி, மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் பாலகிருஷ்ணன், கல்லூரி பொருளாளர் வி.ஆர்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai