Enable Javscript for better performance
அடைமழையால் 250 வீடுகளுக்குள் நீர் புகுந்தது- Dinamani

சுடச்சுட

    

    கோடையில் பெய்த அடைமழையால் 250 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. புதன்கிழமை காலையில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் திரண்டன. இரவு 10 மணிக்கு மேல் கனமழை பெய்யத் தொடங்கியது.

     இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. பின்னர் அதிகாலை வரை தூறிக் கொண்டே இருந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து 2 மணி நேரமாக வெளுத்து வாங்கியது. கனமழையால்  ஈரோட்டில் பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

    சூரம்பட்டி, கருங்கல்பாளையம், மரப்பாலம்  உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில்  நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் விடிய விடிய தூக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

     தெப்பக்குளம் வீதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் சாக்கடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்தது. துர்நாற்றத்தால் அவதிப்பட்ட மக்கள்  தண்ணீரை வெளியே இறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

     ஈரோடு ரயில் நிலையம் முன்பு மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமானது. அதேபோல் ஈரோடு பேருந்து நிலையம் அருகே  உள்ள அண்ணாமலை லே-அவுட் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

     மேலும் பலத்த மழையால் ஈரோடு வ.உ.சி.விளையாட்டு மைதானத்தில் உள்ள சுற்றுச்சுவரும்  இடிந்தது. ஈரோடு முனிசிபல் காலனி பகுதி மற்றும் கருங்கல்பாளையம் பதிவாளர் அலுவலகம் அருகே மின்கம்பி மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் சாலை பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் இருபுறமும் மழை வெள்ளம் வழிந்து ஓடியது. திடீரென வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் அருகில் உள்ள வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

     இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணி துறை ஊழியர்கள் விரைந்து வந்து மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்தனர். ஈரோடு பகுதியில் மட்டும்  100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai