காங்கிரஸில் கோஷ்டிகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடையாது:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் கோஷ்டிகளுக்கு வாய்ப்பு கிடையாது; கோட்டா முறையும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் கோஷ்டிகளுக்கு வாய்ப்பு கிடையாது; கோட்டா முறையும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருமானால், இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும். பொற்கொல்லர்களைக் காப்பாற்றுவதற்காகத் தங்கத்தின் மீதான ஒரு சதவீத கலால் வரி விதிப்பை மத்திய அரசு நீக்க வேண்டும்.

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த தமிழக ஆளுநர் உடனே உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மூலம் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்.

கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டப் பிரச்னையில், திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே அரசுகள் உறுதி காட்டி வருகின்றன. அதிகாரிகளை நம்பிக்கொண்டு இருக்காமல், மத்திய, மாநில அரசுகள் விவசாயப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

சோதனை என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தேர்தல் ஆணையம் அச்சப்படுத்தி வருகிறது. இது மோசமான விஷயமாகும். திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதைப் பொருத்தவரை கருணாநிதியின் கருத்துதான் எங்கள் கருத்து. விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்.

அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி பிரசாரம் செய்வதை தவறு என்று சொல்லியிருக்கிறேன். சில இடங்களில் ஆர்வக்கோளாறு காரணமாக நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் தொடராது.

ப.சிதம்பரம் தொடர்பான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் கோஷ்டிகளுக்கு வாய்ப்பு கிடையாது. கோட்டா முறையும் இல்லை. உண்மையான காங்கிரஸ்காரர்களுக்கு வாய்ப்புத் தரப்படும். விருப்ப மனு தந்தவர்களுக்கு மட்டுமே வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்புத் தரப்படும்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெளியே வர வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை என்பதை விட, ஜெயலலிதா தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் ஆவல் உள்ளவர்களாக இருக்கிறோம். ஆகவே, தொகுதி எண்ணிக்கை, தொகுதிகள் ஒதுக்கீடு போன்றவற்றில் காங்கிரஸýக்கும் திமுகவுக்கும் எவ்விதப் பிரச்னையும் வராது. காங்கிரஸில் இருந்து தமாகா பிரிந்தது என்பது காங்கிரஸில் களை எடுத்தது போன்றதாகும் என்றார்.

பேட்டியின்போது, காங்கிரஸின் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி, வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன், தெற்கு மாவட்டத் தலைவர் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com