சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோயிலில் 2 நாள்கள் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. ஸ்ரீராமர், ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்றுதல், தீர்த்தக் குடம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பவானி ஆற்றில் சுவாமிக்கு புதன்கிழமை காலை சிறப்பு பூஜை செய்து ஆற்றில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்து பவானி ஆற்றுக்குச் சென்று அங்கு வழிபாடுகள் நடத்தினர். அங்கிருந்து காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்குச் சென்றனர். சிவன் அவதாரங்களில் ஒன்றான தன்னாசி மண் உருவச் சிலையை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.