பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி, சிக்கரசம்பாளையத்தில் மலர் சப்பரத்தில் அம்மன் புதன்கிழமை அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோயில் இருந்து மலர் சப்பரத்தில் பண்ணாரி அம்மன் (உற்சவர்) செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு, சிக்கரம்பாளையத்துக்கு புதன்கிழமை காலை வந்தடைந்தது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் மலர்களைத்தூவி அம்மனை வழிபட்டனர்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (மார்ச் 10) வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் ஆகிய கிராமங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கவுள்ளார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வெள்ளியம்பாளையம்புதூர், அக்கரைத்தத்தப்பள்ளிக்கு அம்மன் சப்பரம் சென்றடையும். அதன்பின்னர் சனிக்கிழமை அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர் வழியாகச் சென்று சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயிலில் அம்மன் தங்குகிறார்.
அதன்பின்னர் ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய இரு நாள்களில் சத்தியமங்கலம் நகர் பகுதிகளில் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை காலை பட்டவர்த்தி அய்யம்பாளையம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கவுள்ளார். அன்றைய தினம் பிற்பகலில் புதுவடவள்ளி, புதுக்குய்யனூர்,ராஜன்நகர் வழியாக அம்மன் சப்பரம் மீண்டும் கோயிலைச் சென்றடையும். அன்றிரவு கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து வரும் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நித்தியப்படி பூஜை நடைபெறும். கோயிலில் தினமும் தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் மலைவாழ் மக்களின் களியாட்டமும் நடைபெறும்.
அடுத்த நாள் 21ஆம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதலும், 22ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதலும் நடைபெறும்.
அடுத்த நாள் 23ஆம் தேதி புஷ்ப ரதம், 24ஆம் தேதி மஞ்சள் நீராட்டு, 25ஆம் தேதி திருவிளக்குபூஜை, 28ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைய உள்ளது.