Enable Javscript for better performance
திமுகவின் குருகுலத்தில் மக்கள் தேமுதிக: விரக்தியில் உடன்பிறப்புகள்- Dinamani

சுடச்சுட

    

    திமுகவின் குருகுலத்தில் மக்கள் தேமுதிக: விரக்தியில் உடன்பிறப்புகள்

    By dn  |   Published on : 15th April 2016 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுகவுக்கு மட்டுமல்ல, திமுக தலைவர் கருணாநிதிக்கும் குருகுலமாக விளங்கும் ஈரோடு நகரில் (ஈரோடு கிழக்கு) மக்கள் தேமுதிக களம் இறங்குவது உடன்பிறப்புகளை விரக்தி அடையச் செய்துள்ளது.

     தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டதால் அரசியல் மேடையில் தினமும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதன்படி, தாங்கள் விரும்பிய திமுக கூட்டணிக்குச் செல்லாமல், மக்கள் நலக் கூட்டணிக்குச் சென்ற விஜயகாந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த சந்திரகுமார் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மக்கள் தேமுதிகவை உருவாக்கியுள்ளனர்.

     சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் திமுக கூட்டணியில் சீட்டு ஒதுக்க வேண்டும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பிற பொறுப்பாளர்களுக்குத் தேர்தலுக்குப் பிறகு சில பதவிகள் வழங்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் திமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பதாக மக்கள் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

     மேலும், எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் தாங்கள் ஏற்கெனவே வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகளையே கேட்டதால் அவர்களுக்கு அந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கில் இருந்து முதலில் பிரச்னை உதயமாகி இருக்கிறது.

     திராவிட இயக்கங்களுக்கு குருகுலமாக விளங்கும் ஈரோடு மாநகரின் முக்கியப் பகுதிகள், பெரியார் வீடு உள்ளிட்டவை இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது, திமுக உடன் பிறப்புகள் மத்தியில் வருத்தத்தை மட்டுமன்றி விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

     கடந்த தேர்தலில் மாவட்டத்திலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (10,644) திமுக தோல்வி அடைந்த தொகுதி என்பதாலும், சந்திரகுமாருக்கு தொகுதியில் அவ்வளவாக நல்ல பெயர் இல்லாத நிலையில் வெற்றி நமக்கே என்றும் கணக்குப் போட்டு முத்துசாமியும் குஷியாகி இருந்தாராம். ஆனால், மக்கள் தேமுதிக என்ற பெயரில் இப்போது தொகுதியைத் தட்டிப் பறித்து, திமுக நிர்வாகிகளின் கனவைக் கலைத்திருப்பது ஒட்டுமொத்த ஈரோடு திமுகவினரையும் வெறுப்பில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

     ஏற்கெனவே ஈரோட்டில் திமுகவானது என்.கே.கே.பி.ராஜா அணி, அதிமுகவில் இருந்து வந்த முத்துசாமி அணி என்ற இரு கோஷ்டிகளாக இயங்கி வரும் நிலையில், சந்திரகுமாருக்கு வாய்ப்பு அளித்ததன் மூலமாக மூன்றாவது அணிக்கு தொடக்கமாக அமைந்துவிடும் என்றும், இதுவே ஈரோடு திமுகவின் எதிர்காலத்துக்கு ஆபத்தாக மாறிவிடும் என்றும் உள்ளூர் உடன்பிறப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றனராம்.

     சந்திரகுமாருக்கு உதவப் போய், சொந்தக் கட்சிக்காரர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது திமுக.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai