சுடச்சுட

  

  அழகுத் தமிழில் பெயர் சூட்டுங்கள்: அரசுச் செயலர் த.உதயச்சந்திரன் வேண்டுகோள்

  By ஈரோடு  |   Published on : 07th August 2016 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அழகுத் தமிழில் பெயர் சூட்ட முன்வர வேண்டும் என்று தமிழக அரசுச் செயலர் த.உதயச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

  ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்ற இரண்டாம் நாள் சிந்தனை அரங்கில், "நிறம் மாறிய பூக்கள்' எனும் தலைப்பில் அரசுச் செயலர் த.உதயச்சந்திரன் பேசியதாவது:

  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களில் சிலர் இந்தியப் பண்பாட்டையும், கலாசாரத்தையும் நேசித்துப் பாதுகாத்தனர். சென்னை மாகாணத்தில் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் எழுத்தராக பணியில் சேர்ந்து, தமிழ் இலக்கண இலக்கியம் குறித்து ஆய்வு செய்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த அவர் இரு மொழிகளிலும் இருந்த அடிப்படை இலக்கணத்தை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இவர் தொடங்கி, ராபர்ட் கால்டுவெல் வரை திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

  திருவள்ளுவரது உருவத்தை முதல் முதலில் நாணயத்தில் பொறிக்க எல்லீஸ் உத்தரவிட்டார். ஆங்கிலேயரே தமிழ் மீது காதல் கொண்டு தனது பெயரை தமிழில் மாற்றியுள்ளனர். ஆனால், இன்றையக் குழந்தைகளின் பெயரைக் கேட்டால் அன்னிய உலகிற்கு சென்று விட்டோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 2,000 ஆண்டு மரபுகளை எடுத்துக் கடத்தும் ஆயுதம்தான் பெயர். எனவே, அழகுத் தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

  மதுரை, தொண்டி, கொற்கை, வஞ்சி ஆகிய நகரங்களில் உள்ள பெயர்கள் அன்றைய சிந்து சமவெளியில் இருந்த பாகிஸ்தான் பகுதியில் இன்றும் அதேபெயரில் அழைக்கப்படுகின்றன.

  மதுரை மாவட்டம், கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வைக் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டும். அங்கு 2,000 ஆண்டுகள் பழமையான பொருள்கள் கிடைத்து வருகின்றன. செழிப்பான, நாகரிகம் மிக்க வாழ்வை தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் அங்கு கிடைத்துள்ளன. அதேபோல, ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதிக்குச் சென்று அங்கு கிடைத்துள்ள பழம் பொருள்கள் குறித்தும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

  முன்னதாக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்ற கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில், அக்னி ஸ்டீல் இயக்குநர்கள் எம்.சின்னசாமி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.தங்கவேலு, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai